Monday, May 23, 2011

உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்


இறுதி யுத்தத்தின்
இறுதி போராளியை
விழுங்கிய வாளில்
இன்னமும் ரத்தக் கறை
காய்ந்திருக்கவில்லை.

வெந்தழல் மேகங்களில்
நீதித்தேவதைகளைக் கண்டதாக
வாக்குமூலம் அளித்தவர்கள்
கொலைகளனிற்கு அனுப்பப் படுகிறார்கள்.

பிசாசெழுதும் வரலாற்றினில்
நம்பிக்கையின் பெயரால்
சிந்தப்படும் கண்ணீர்த் துளிகளுக்கு
கோமாளிகளின் முகமூடி
அணிவிக்கப் படுகிறது.

ஓராயிரம் நூற்றாண்டுகளாக
மண்ணுக்கடியில்
புதையுண்டிருந்த புரட்சியின்
சொல்லை விடுவித்த
கவிஞன், தானெழுதிய
கவிதைகளை கிழித்தெறிகிறான்.

கோப்பைகளில் நிரம்பிய
அழுகுரல்களை பருகும்
அரக்கனுக்கு தெரியவேயில்லை
தான் சுவைப்பது
தீரா மௌனத்தினையே என்பது.

இங்கே,
இனியொரு போதும்
புழுக்கள் ஊர்ந்து செல்ல போவதில்லை
விதைகள் துளிர்விட போவதில்லை
துப்பாக்கிகள் இயங்க போவதில்லை.
அன்பின் சாட்சியாக
நல்லுறவின் சாட்சியாக
இறையாண்மையின் சாட்சியாக
இங்கே,அமைதி நிலைநாட்டப் பட்டுவிட்டது.

இவ்வுலகின் கடைசி தினத்தில்,
சிதைந்தவர்களின் உதிரமெழுதும்
தீர்ப்பின் பிரதிகள்
வாசிக்கப்படும் போது
கருணையின் தெய்வங்கள்
தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ளக் கூடும்.
                                                                                                                                                           - துரோணா

நன்றி :திண்ணை

Monday, May 2, 2011

இரண்டு கவிதைகள்



இன்று,
மெழுகுவர்த்தியின்
கடைசித்துளி தீயின்
மேல் விழுந்த
மழையின் முதற் தூரலில்
நான் உன்னுடைய
முகத்தைக் கண்டேன்.
அது என்னுடைய
முகம் இல்லை
என்று மட்டும் சொல்லிவிடாதே.
ஒருவேளை இதுவரை
நீயேக்கூட பார்த்திராத
உனது முகமாக இருக்கலாம்
*
இறுதியில்,கண்ணீர் சிந்தாமல்
அழக்கூட பழகிக் கொண்டு விட்டேன்.
இனியொரு பிரச்சினையுமில்லை.
புறக்கணிப்பின் கரங்களை
வாஞ்சையுடன் திரும்பவும்
முத்தமிடலாம்.